எண்ணெய் கழிவுகள் பரவிய பழவேற்காடு கடற்கரையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொன்னேரி அருகே பழவேற்காடு கடற்கரையில் எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-21 12:59 GMT

பழவேற்காடு கடற்கரையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

பழவேற்காடு கடற்கரையில் எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். 11கிலோ எண்ணெய் கழிவுகள் தற்போது வரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன்களில் எண்ணெய் கழிவு கலந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு உள்ளார்.


மிக்ஜாம் புயல் வீசிய நாளில் எண்ணூர் கழிமுகத்தில் சென்னை சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெளியேறி கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், வங்கக்கடல் என முழுவதும் பரவியது. எண்ணூர் கழிமுகம் முழுவதும் எண்ணெய் படலமாக மாறிய நிலையில் மீனவர்கள் உதவியுடன் அவை அகற்றப்பட்டு வருகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயம் உடனடியாக எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் எண்ணெய் கழிவுகள் சிறு சிறு குப்பிகளாக பழவேற்காடு கடற்கரை பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலம் பழவேற்காடு கடல் மற்றும் ஏரி பகுதியில் படர்ந்து இருப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி நிவாரணம் அளிக்க வேண்டுமென நேற்று 33 மீனவ கிராம பிரதிநிதிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

மீனவர்களின் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பழவேற்காடு கடல் பகுதியில் அத்தகைய எண்ணெய் படலங்கள் படர்ந்துள்ளதா என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பழவேற்காடு கடலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மீனவர்கள் தங்களுக்கான பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீனவர்களின் புகாரை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பழவேற்காடு பகுதி மீன்களில் எண்ணெய் கழிவு கலந்துள்ளதாக என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். ஆய்வு முடிவுகளில் எண்ணெய் கழிவுகள் இருப்பது தெரிய வந்தால் அதுகுறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

மேலும் ஆய்வு முடிவில் எண்ணெய் கழிவுகள் இல்லை என்பது தெரிய வந்தால் அதுகுறித்து முறையாக அறிவிக்கப்படும் எனவும், மக்களும் அச்சமின்றி பழவேற்காடு மீன்களை எடுத்து கொள்ளலாம் என அறிவிப்பதற்கு பயனளிக்கும் என்றார். தொடர்ந்து எண்ணெய் கழிவுகள் குறித்து கண்காணிக்கப்படும் என்றார். மாவட்ட அளவிலும், வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களுடன் தொடர்பில் இருந்து எண்ணெய் கழிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மீன்பிடி வலைகள், படகுகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என்றார். எண்ணூர் பகுதியில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், 20கிமீ தூரத்தில் உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகள் தாக்கம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது வரையில் 11கிலோ எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எண்ணெய் கழிவுகள் குறித்து கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


Tags:    

Similar News