பொன்னேரி அருகே தூளியில் விளையாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த இளைஞர்

பொன்னேரி அருகே தூளியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் புடவை கழுத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-21 11:39 GMT

ராசையா.

பொன்னேரி அருகே தூளியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு இருளர் காலனியை சேர்ந்தவர் ராசையா (17). 10.ஆம் வகுப்பு வரை படித்து முடித்த ராசையா மேற்படிப்பிற்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் அவ்வப்போது தனது வீட்டில் புடவையால் தூளி கட்டி விளையாடுவது வழக்கம். அந்த வகையில் தூளியில் நேற்றும் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சிக்கி புடவை கயிறு போல் இறுகியுள்ளது.இதில் ராசையா பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பெற்றோர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது ராசையா மயங்கிய நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராசையா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News