மீஞ்சூர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
மீஞ்சூர் சுற்றுவட்டார இடங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு காவல்துறை அதிகாரிகள் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம். ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சரகத்தில் நேற்றிரவு காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டனர். மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகரில் ரவுடிகளின் வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அனைத்து பிரிவுகளை சேர்ந்த ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்து ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறா வண்ணம் சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வப்போது மீஞ்சூர் சுற்றுவட்டார இடங்களில் தொடர் கொலைகள், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு நேரங்களில் சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் உள்ளனரா அல்லது குற்ற செயல்களில் ஈடுபட வெளியே சென்றுள்ளனரா என விசாரணை மேற்கொண்டு மேலும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழா வண்ணம் காவல்துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகையின்போது சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுகளால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக தான் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் ரவுடிகள் வேட்டை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.