ரயில் தண்டவாளத்தின் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு; 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளங்களில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பும், 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-21 09:30 GMT

சம்பவம் நடந்த இடத்தில் சென்னை ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளங்களில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் பயிற்றப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 2மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

4நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 2வது சம்பவம் நடந்துள்ளதால்  2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கல்வி, வேலை, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். புறநகர் பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்களை இணைக்க கூடிய பிரதான மார்க்கமாக உள்ள இந்த மார்க்கத்தில் தான் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. இன்று காலை பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை மாற்றும் இணைப்பு பெட்டியில் இருந்த போல்ட் கழற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் சிக்னல் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நிலையத்தில் வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் என இரு மார்க்கத்திலும் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து அதிகாலையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சென்னை - கும்மிடிப்பூண்டி என இரண்டு மார்கங்களிலும் சிக்னல் பெட்டியுடன் தண்டவாளங்களை இணைக்கக்கூடிய பெட்டியில் போல்ட்டுகள் கழற்றப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கழற்றப்பட்டு இருந்த போல்டுகளை இணைத்தனர்.

இதனையடுத்து இரண்டு மணி நேரம் கால தாமதமாக இரு மார்க்கங்களிலும் மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கின. இதே போல பொன்னேரி ரயில் நிலையம் அருகே புளிக்குளம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தண்டவாள கம்பிகளை தரையில் உள்ள கான்கிரீட் கற்களுடன் இணைக்கும் 95 இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தி இணைப்பு கம்பிகளை பொறுத்தி ரயிலை இயக்கினர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்த சூழலில் இன்று மீண்டும் பொன்னேரி ரயில் நிலையம் அருகே இதேபோன்று தண்டவாளத்தை சிக்னல் பெட்டியுடன் இணைக்கும் போல்டுகள் அவிழ்க்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. வடமாநிலங்களை இணைக்க கூடிய பிரதான மார்க்கத்தில் ரயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் சதி செயல்களில் ஈடுபட்டார்களா அல்லது ரயில்வே ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சம்பவம் நடைபெற்ற பகுதியில் சென்னை ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். நள்ளிரவு பணியில் இருந்தவர்கள் யார், என்னென்ன பணிகள் நடைபெற்றன என்பது குறித்து விசாரித்தார்.

தொடர்ந்து போல்ட் கழற்றப்பட்டதால் அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தால் என்ன பாதிப்புகளை சந்திதிருக்கும் எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே எஸ்பி போல்ட் கழற்றப்பட்ட சம்பவத்தால் ரயில் கவிழ வாய்ப்பில்லை என ரயில்வே ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார். இருவேறு சம்பவங்கள் குறித்தும் இரண்டு தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Similar News