மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு
சிமிண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிர் இழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான சாமிநாதன் (70). இவரது தொகுப்பு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உறவினர்கள் சென்று பார்த்தனர். அவர் மீது வீட்டின் மேற்கூரையின் பூச்சு பெயர்ந்து விழுந்து சாமிநாதன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதியவர் சாமிநாதனின் சடலத்தை கைப்பற்றிய திருப்பாலைவனம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து உயிரிழந்த கிராமத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டி 25ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாலும் பல வீடுகள் சிதிலமடைந்து வாழ தகுதியற்ற நிலையில் இருப்பதால் மாற்று வீடுகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து முதியவர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் கிராமத்தில் சிதலமடைந்த நிலையில் உள்ள 28வீடுகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று ஏற்பாடாக புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.