பொன்னேரி அருகே பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி தேய்பிறை பிரதோஷ விழாவில் திருளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆனந்த லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.விழாவின் சிறப்பம்சமாக நந்தீஸ்வரருக்கு பால், தயிர்,சந்தனம், தேன், ஜவ்வாது, பன்னீர்,விபூதி, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரபகங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து தீப,தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
அபிஷேகத்தை பக்தர்கள் கண்குளிர கண்டு பக்திப்பெருக்குடன் வணங்கினர்.இதை தொடர்ந்து ஆனந்தவள்ளி தாயாருக்கும், அகத்தீஸ்வரருக்கும் மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
இந்த சனிப்பிரதோஷ விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர். பின்னர் ஆலயத்தின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.