சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்: பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.;
சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவில்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை, பங்குனி உத்திரம், அரசு விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இன்று செவ்வாய்க்கிழமை, பங்குனி உத்திரம், அரசு விடுமுறை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், சுற்றியுள்ள பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, ஆரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அரசு விடுமுறை தினம் என்பதால் வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் பெரியவர்கள் மட்டுமே அதிகளவில் வந்து செல்லும் நிலையில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில் மேலும் நடைபாதி வியாபாரிகள் சாலை இரு புறம் ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் நடத்துவதால் ஆரணியில் இருந்து சென்னை செங்குன்றம் இவ் வழியாக செல்லும் சிறு மற்றும் பேருந்துகள் செல்ல வழியின்றி ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை கோவில் சார்பில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மாவட்ட நிர்வாகத்திடம், ஊராட்சி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் சிறுவாபுரியில் சாமி தரிசனம் செய்ய பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகின்றது. சாலையை ஆக்கிரமித்து நடைபாதை வியாபாரிகளை கடைகளை அப்புறப்படுத்தி. அவர்களுக்கு மாற்று இடத்தில் கடைகளை அமைத்துத் தந்து சாலை இரு புறமும் விரிவு படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலைமை ஏற்படாது என்று பொதுமக்களும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் வயதானவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடும் செய்து தர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே பக்தர்களின் நலனை கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.