வீடு கட்ட தோண்டிய போது கிடைத்த சிலைகளை கிராமத்தில் வழிபட வழங்க வேண்டும்
வீடு கட்டுவதற்காக தோண்டிய போது கிடைத்த 3 சாமி சிலைகளை வழிபட வழங்குமாறு கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் மெக்கானிக்கான கோபி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக கடகல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சாமி சிலைகள் பூமிக்கடியில் புதைந்திருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியதை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த சிலைகளை கைப்பற்றினர்.
அந்த சிலைகளின் தன்மை பற்றி ஆராய தொல்லியல் துறையினரை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோட்டாட்சியர் செல்வத்திடம் மனு அளித்தனர்.
சிலைகள் கண்டெடுக்கப்பட்ட தங்களது கிராமத்திலேயே அந்த சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அதிகாரிகள் மீண்டும் அவற்றை ஒப்படைக்குமாறு முறையிட்டனர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.