புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பா.ஜ.க. சார்பில் மரியாதை
பொன்னேரி அருகே புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.;
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உருவ படங்களுக்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பா.ஜ.க. சார்பில் பொன்னேரியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழக வீரர்கள் உட்பட 40 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். நாட்டிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களை தியாகத்தை புகழ்ந்து பேசினார்.
இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வின் தேசிய மொழிப்பிரிவு சார்பில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்தின் முன்பு அகல்விளக்கு ஏற்றி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
தேசிய மொழிப்பிரிவின் மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா ஏற்பாடு செய்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.சரவணன், பத்மநாபன், மற்றும் சோமு.ராஜசேகர், பி.சங்கர், சத்யமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல பொன்னேரியில் ஆட்டோ ஓட்டுநர் உதயமூர்த்தி தனது ஆட்டோவின் மூன்று புறமும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக வாசகங்களை எழுதி வைத்திருந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.