குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடைபயணம்
இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது;
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கிவரும் செங்கல் தொழிற்சாலைகளில் கொத்தடிமையாக பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபயணம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கிவரும் செங்கல் தொழிற்சாலைகளில் கொத்தடிமையாக பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்க வேண்டி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சிபாரதம் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு செல்லும் நோக்கில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இன்று பொன்னேரியில் இருந்து புரட்சி பாரதம் கட்சியினர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் பேனர் மற்றும் கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இவர்களை பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.அதன்படி நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தையில் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.இதன் காரணமாக பொன்னேரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.