ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: ஆரணியில் முகக்கவசம், உணவு வழங்கல்!
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் 30ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ராஜிவ் காந்தியின் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் எம். ஹேமபூஷனம், வழக்கறிஞர்கள் கே. குமார், டி. அருள் ஆகியோர் மற்றும் கூட்டணிக் கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆரணி பேரூராட்சியில் பணியாற்றும் 50 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் என 200 பேருக்கு அன்னதானமும், 500 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.