குண்ணமஞ்சேரி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் வார திருவிழா
குண்ணமஞ்சேரி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.;
புரட்டாசி ஐந்தாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு குண்ணமஞ்சேரி சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் புரட்டாசி ஐந்தாம் வாரத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் பெருமாள் பொன்னாபரணங்களுடன் ஜொலித்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் சிறப்பம்சமாக நடைபெற்ற சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.இதனை தொடர்ந்து பெருமாளுக்கு உகந்த பஜனை பாடல்கள் பாடப்பட்டது.
பெருமாளுக்கு உகந்த புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை உள்ளிட்ட ஒன்பது வகையான பலகாரங்களும் விதவிதமான பழங்களும் படையலிடப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து எம்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.இதையடுத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ பெருமாள் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோலாகலமாக நடைபெற்ற விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்து சென்றனர்.