பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

சாலை சீரமைக்காத பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-09-01 09:58 GMT

சாலை மறியல் செய்தவர்களுடன் பொன்னேரி நகர்மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொன்னேரி நகராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்த தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் செய்து நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. 27வார்டுகளை கொண்ட பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த வார்டுகளிலும் முறையாக சாலைகள் செப்பனிடப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். என்.ஜி.ஓ. நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகம் அருகே என்.ஜி.ஓ நகர் செல்லும் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக சாலை சீரமைக்காமல் குண்டும், குழியுமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், சிறிய மழைக்கே சேறும், சகதியுமாக மாறி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள், முதியோர்கள் என எவருமே நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  பொன்னேரி நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் வந்தார். அவருடன்  பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் சாலையை சீரமைத்து தருவதாக நகர்மன்ற தலைவர் பரிளம் விஸ்வநாதன் உறுதி அளித்தார். அவர் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News