பொன்னேரியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை

Today Protest News -பொன்னேரியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-13 06:45 GMT

பொன்னேரியில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Today Protest News -பொன்னேரி நகராட்சியில் மோசமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாகவும், 3 மாதங்களாக 15கிராமங்களுக்கு செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 30000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி நகராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை பணிகளுக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டதால் சாலைகள் அனைத்தும் முற்றிலும் மோசமாகி உள்ளது.

இந்நிலையில் மோசமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி குடியிருப்போர் நலசங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பணிகள் காரணமாக கடந்த 3மாதங்களாக 15கிராமங்களுக்கு செல்லும் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமவாசிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் ஆலாடு, மனோபுரம், ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறு மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது எனவும், அவசர தேவைகளுக்கு அழைக்கும் பட்சத்தில் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட தங்களது பகுதிக்கு வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து அதிகாரிகளையும் பலமுறை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.மேலும் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் சாலைகளை சீரமைக்க முன்வராதது ஏன் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் பருவமழை துவங்குவதற்குள்ளாக சாலையை சீரமைத்து பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பு ஏற்படுத்தியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News