மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து, அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-12 03:30 GMT

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

பொன்னேரியில் சுற்றுப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் அண்மை காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவும் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பொன்னேரி சின்னக்காவனம் பகுதி மக்கள் பொன்னேரி துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு மின்வாரிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலட்சிய போக்குடன் பதிலளிப்பதாக குற்றம் சாட்டினர்.


மேலும் பல்வேறு கடைகளை வைத்து தொழில் நடத்தும் மக்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டினர். குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பாதிப்பை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேறு இடத்தில் இருந்து தங்களுக்கு வரும் முக்கிய பாதையிலே பிரச்சினை எனவும் தங்களது இடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை என கூறி மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News