மீஞ்சூர் அருகே சட்ட விரோத பார் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை: ரவுடி கொலை

கொலை செய்யப்பட்ட ரவுடி மூர்த்தி மீது 3 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Update: 2022-05-10 04:30 GMT

மீஞ்சூர் அருகே அனுமதியில்லாத சட்ட விரோத  பார் நடத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர்  மூர்த்தி என்கிற ஒற்றை கை மூர்த்தி. இவர் மீது 3கொலை உள்ளிட்ட 28வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் வாயலூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் அருகே சட்டவிரோதமாக பார் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல மூர்த்தி தமது பாரை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு நுழைந்த சுமார் 20பேர் கொண்ட கும்பல் ஒன்று மூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது. காலையில் மதுபானம் வாங்குவதற்காக பாருக்கு வந்த குடிமகன்கள் மூர்த்தி  கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரவுடி மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதால் அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையதால் அந்த முன்விரோதத்தில் கொலை நிகழ்ந்ததா என பல கோணங்களில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்ற காவல்துறை தொடர்பான மானிய கோரிக்கை நடைபெறும் நாளில் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் இருவேறு இடங்களில் இரண்டு பிரபல ரவுடிகள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக பார்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முன்வைத்தும் அவற்றை மீது அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் செல்வதால், இதுபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருகிறது எனவே இதுபோன்ற சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் உள்ளிட்டவை அகற்றினால் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News