தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை; இருவர் கைது
பொன்னேரியில், சொத்து தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
கொலை செய்த வழக்கில் வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. திமுகவை சேர்ந்த நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர். இவருக்கும் இவரது சகோதரரான மோகன் மகள் காயத்ரி குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. 6 சென்ட் நிலத்தில், தலா 3 சென்ட் பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த இடத்தில் மோகன் குடும்பத்தினர் பின் பகுதியில் வீடு கட்டியுள்ள நிலையில், முன் பகுதி காலி நிலம் இளங்கோவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலாடு பகுதியில் உள்ள பிரச்னைக்குரிய மோகன் வீட்டில், இவர்களது சகோதரி மகள் குணசுந்தரி வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.
சமீபத்தில் வீட்டை காலி செய்த குணசுந்தரி வீட்டின் சாவியை காயத்ரியிடம் வழங்காமல், இளங்கோவிடம் வழங்கியுள்ளார். இதன் காரணமாக காயத்ரிக்கும், குணசுந்தரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தினை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்தபோதும் இளங்கோவிற்கும், அவரது அண்ணன் மகள்கள் குடும்பத்திற்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்படாமல் தகராறு ஏற்பட்டு மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதி திமுக கவுன்சிலர் இளங்கோ, தமது அண்ணன் வீட்டிற்குள் புகுந்து தமது அண்ணன் மகள்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை தொடர்பாக காயத்ரி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் இளங்கோ உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல குணசுந்தரி அளித்த புகாரின் பேரில் காயத்ரியின் உறவினர் ராபர்ட் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் 2 தரப்பினர் மீதும் பொன்னேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு, காயத்ரியின் உறவினர் ராபர்ட் தமது தாய்மாமா பாலமுருகனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். தமக்கு பிரச்னை எனவும் அதற்காக வருமாறு ராபர்ட் விடுத்த அழைப்பின் பேரில் பாலமுருகன் ஆலாடு பகுதிக்கு வந்துள்ளார். ராபர்ட், பாலமுருகன் இருவரும் பிரச்னைக்குரிய வீட்டின் அருகே இருந்த போது, அங்கு வந்த சிலர் ராபர்ட்டை தாக்கிய போது, அங்கிருந்து ராபர்ட் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பாலமுருகனை பலமாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற தீனதயாளன் என்பவர், தமது உறவினரான பாலமுருகன் தாக்கப்படுவது கண்டு அதிர்ச்சியடைந்து அங்கு சென்றதில், மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து பாலமுருகனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நிலப்பிரச்னையில் தொடர்புடையவர்களின் மற்றொரு சகோதரரின் மகன்கள் வினோத், திலிப், இவரது நண்பர் ராஜ்கிரண் ஆகிய 3 பேர் பாலமுருகனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து தனியார் நிறுவன ஊழியரான பாலமுருகனை கொலை செய்த வழக்கில் வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான திலீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர். வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்து சாவி ஒப்படைப்பதில் தகராறு ஏற்பட்டு, நிலத்தை அளவீடு செய்வதில் தகராறாகி, உறவினர்களின் சண்டையில் தலையிட அழைக்கப்பட்ட உறவினர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.