கொரோனோ பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற கைதி தப்பி ஓட்டம்
சோழவரம் அருகே கொரோனோ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கைதி போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பி ஓட்டம்.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நெற்குன்றம் ஊராட்சிமன்றத்தின் 1வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் பாப்பாத்தி அம்மாள் (50). செக்கஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் பாப்பாத்தி அம்மாள் வீட்டின் மீது கடந்த 1ஆம் தேதி நாட்டு வெடுகுண்டு வீசப்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை பாப்பாத்தி அம்மாளின் வீட்டின் மீது வீசியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, வீட்டில் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள நாகராஜ் என்பவரை வெட்டிய விக்கி @ விக்னேஷ் மீது வார்டு உறுப்பினரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்த முன் விரோதம் காரணமாக வார்டு உறுப்பினர் வீட்டின் மீது விக்னேஷ் நாட்டு வெடிகுண்டு வீசியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து விக்னேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்திய சோழவரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது போலீஸ் ஜீப்பில் இருந்து கைதி விக்னேஷ் தப்பி ஓட்டம் பிடித்தார். தப்பியோடிய கைதி விக்னேஷை சோழவரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.