மீஞ்சூர் அருகே சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; மக்கள் சாலை மறியல்
மீஞ்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவி உயிரிழந்தார். நீதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் சேதமடைந்த மொபட்.
மீஞ்சூர் அருகே நடந்த சாலை விபத்தில், கணவன் கண் முன்னே கர்ப்பணி மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தார். இப்பகுதியில் தொடர் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கோரி, சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த. கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 22. மூன்று மாத கர்ப்பிணியான இவர் இரும்பு கழிவுகளை சேகரிப்பதற்காக, பட்டமந்திரி பகுதிக்கு சென்றுவிட்டு, தனது கணவர் அஜித், 25 உடன், மொபட்டில் மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சாம்பல் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, அஜித் ஓட்டிசென்ற மொபட் மீது மோதியது. இதில், ஐஸ்வர்யா லாரியின் சக்கரத்தில் சிக்கி, வயிற்றில் இருந்த மூன்றுமாத குழந்தையுடன் உடல் நசுங்கி, கணவன் கண் முன்னே அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அஜித் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விபத்து பகுதிக்கு விரைந்து வந்து, அஜித்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த ஐஸ்வர்யா சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று மாத கர்ப்பிணிப் பெண், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மருத்துவ பரிசோதனை முடிந்து வந்த ஐஸ்வர்யாவின் சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தொடர்ந்து நடந்து வரும் சாலை விபத்துக்களை தடுக்கவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.