வடசென்னை அனல் மின்நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்த ஒரே நாளில் மின்உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் பழுது ஏற்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு;
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் 1வது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும் 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
2வது அலகில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 49 நாட்கள் பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்து நேற்று காலையிலிருந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரேநாளில் அந்த அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.