பழவேற்காடு நிரந்தர முகத்துவாரத்திற்கான முதற்கட்ட பணி துவக்கம்
நிரந்தர முகத்துவாரத்திற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதால், நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட உள்ளதை எண்ணி மீனவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் பகுதியானது, மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவதற்கான நுழைவாயிலாக இருக்கிறது.
ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை கடல்நீர் ஏரிக்கும், ஏரிநீர் கடலுக்கும் சுழற்சி முறையில் பயணிக்கிறது. இந்த சுழற்சியின்போது ஏற்படும் கடல் அலைகளால், முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்கள் உருவாகி அடைத்து விடுகிறது.
அச்சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி, தொழில் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு மீனவர்களும், மீன்வளத்துறையும் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றுகின்றனர்.
சில நாட்களில் மீண்டும் அடைந்துவிடுகிறது.மீனவர்களின் தொழில் பாதிப்பை தொடர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, கான்கிரீட் அலை தடுப்பு சுவர்களுடன் நிரந்தர முகத்துவாரம் அமைத்து தர தமிழக அரசு திட்டமிட்டது.
அதற்காக, 2019ல், நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 26.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.பல்வேறு துறைகளின் அனுமதிக்காக, மூன்று ஆண்டுகள் காத்திருந்தது.
கடந்த, 2022ல் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிரந்தர முகத்துவாரம் அமைக்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் பணிகள் துவங்கிய நிலையில், மத்திய வனத்துறையின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியம் திட்டப்பணிகளுக்கு தடை விதித்தது.
மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்து, தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.அதைத் தொடர்ந்து, கடந்த மாதம், அத்துறையின் அனுமதி கிடைத்தது.
அனைத்து துறைகளின் அனுமதி கிடைத்த நிலையில், தற்போது நிரந்தர முகத்துவாரத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.கான்கிரீட் அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கு தேவையான ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை முகத்துவாரம் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பாதை வசதியில்லை.
படகுகளில் கொண்டு செல்வதும் சாத்தியம் இல்லாத நிலையில் கடற்கரையை ஒட்டி பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
லைட்ஹவுஸ்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவிற்கு தற்காலிக பாதை ஏற்படுத்துவதற்காக, செம்மண், கற்கள் கொட்டப்பட்டு வழித்தடம் அமைக்கும் பணிகளில் ஒப்பந்த நிறுவனம் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளது.
டிப்பர் லாரிகளில் சாலைப்பணிகளுக்கு தேவையான மண், கற்கள் கொண்டு வரப்பட்டு, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் சமன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை லைட்ஹவுஸ்குப்பம் கிராமத்தில் இருந்து, 2கி.மீ., தொலைவிற்கு சாலை பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்த சில தினங்களில் இப்பணிகள் முடிவடைந்து, கட்டுமான பொருட்கள் முகத்துவாரப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு, ஜூலை மாதத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்க ஒப்பந்த காலம் உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பணிகளை முடித்துவிட திட்டமிட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.
முகத்துவாரப் பகுதியில் அமையும் கான்கிரீட் அலைத்தடுப்பு சுவரானது, கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160மீ. நீளம், தெற்கு பகுதியில் 150மீ. நீளம் மற்றும், 4.5மீ. உயரத்தில் அமைய உள்ளது.
அலைத்தடுப்பு சுவரின் நீளத்திற்கு, 200 - - 280மீ. அகலம், 3மீ. ஆழத்தில் மணல் திட்டுக்களை 'டிரஜ்ஜர்' இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்படவும் உள்ளது.