பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்: காவல் நிலையத்தில் ஒருவர் சரண்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் அருகே இருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது; இது தொடர்பாக ஒருவர் சரண் அடைந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே, தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு நபர், இந்த சிலையை சேதப்படுத்தியதாகக் கூறி, பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இதனையடுத்து, காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்கு வந்து, முகம் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை துணியால் மூடினர்; அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை சேதப்படுத்தப்பட்ட தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர், அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிலையை சேதப்படுத்தியதாக சரணடைந்த நபர் செல்லக்கிளி எனவும், இவர் எதற்காக பெரியாரின் சிலையை சேதப்படுத்தினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.