பழவேற்காடு அருகே மணல் திட்டுக்களாக மாறிய சாலையால் மக்கள் அவதி

பழவேற்காடு அருகே கடல் அலை சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலையால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2022-12-14 06:58 GMT
பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலை மணல் திட்டுக்களாக மாறியதால் மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. மழையினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இருந்து காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கரையை கடந்தது. வங்காள விரிகுடா கடலுக்கும் அருகே உள்ள பழவேற்காடு ஏரிக்கும் இடையே பழவேற்காடு - காட்டுப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த போது இந்த சாலையில் பல இடங்களில் கடல் சீற்றத்தின் போது அலைகள் சாலையை தொட்டு சென்ற நிலையில் சாலையின் பல இடங்கள் மணல் திட்டுக்களாக மாறி உள்ளன.

இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்வோர், மீனவ கிராமத்திற்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் மேடான சாலையில் செல்லும் வாகனங்கள் ஆபத்தான நிலையில் தடுமாறி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மணலில் சிக்கி அவதியடைவதால் சாலையில் உள்ள மணலை அப்புறப்படுத்த வாகன ஓட்டிகளும், மீனவ கிராம மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News