மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை- பொது மக்கள் சாலை மறியல்

மீஞ்சூர் அருகே அ.தி.மு.க.ஊராட்சி மன்ற தலைவர் கொலையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-16 03:30 GMT

ஊராட்சி தலைவர் கொலையை கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன்.இவர் அ.தி.மு.க.வில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்துள்ளார்.இந்த நிலையில், கொண்டகரை ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று காரின் மீது வேகமாக மோதியது.அதில் நிலைக்குலைந்த கார், பின் பக்கமாக பள்ளத்தில் இறங்கி விட, லாரியில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்டோர், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே கண்ணிமைக்கும் நேரத்தில் சராமரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த தகவல் கொண்டகரை ஊராட்சி பொது மக்கள் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மீஞ்சூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.இதனிடையே உடற்கூறு ஆய்வுக்காக மனோகரனின் சடலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த மீஞ்சூர் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில்போட்டி காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News