பழவேற்காடு மகிமை மாதா திருத்தல 508-ம் ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி
பழவேற்காடு மகிமை மாதா திருத்தல 508-ம் ஆண்டு பெருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது.;
பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 508-ஆம் ஆண்டு பெருவிழாவில் திருத்தேர் பவனி நடைபெற்றது.
பழவேற்காட்டில் பிரசித்திபெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 508-ஆம் ஆண்டு பெருவிழா திருத்தேர் பவனி நடைபெற்றது. ஏசுபிரான், சூசையப்பர், குழந்தை ஏசு உள்ளிட்ட 7 தேர்கள் பவனி வர இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அன்னையின் அருளைப் பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் புனித மகிமை மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் 508 வது ஆண்டு பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த விழா ஆனது 10 நாட்கள் தொடர்ந்து நவநாள் மன்றாட்டு நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அன்னையின் ஆடம்பர தேர்பவனியும் நேற்றிரவு வெகுவிமரிசையாக கோலாகலமாக நடைப்பெற்றது.
அன்னை மகிமை மாதாவின் திருவுருவச் சுருவம் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு மரியே வாழ்க எனும் கோஷத்துடன் தேரில் அமர வைக்கப்பட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. நடுவூர் மாதாகுப்பத்தில் தொடங்கிய தேர்பவனி, கோட்டைக்குப்பம், அம்பேத்கர்நகர், ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. முன்னதாக ஏசுபிரான், சூசையப்பர், குழந்தை ஏசு உள்ளிட்ட 7 தேர்கள் பவனி வந்தன.
இதில் சென்னை, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், மீஞ்சூர், மணலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று விழாவை கண்டு களித்து அன்னையின் அருளைப் பெற்றனர். இந்த விழாவில் மக்கள் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.