பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பிச்சாட்டூர் அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
பிச்சாட்டூர் அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆண்டார்மடம் பகுதியில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட கரை மீண்டும் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு.
ஆந்திர மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே ஆரணி ஆற்றில் பழவேற்காடு அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கால் ஆண்டார்மடம் அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்தது.
இந்நிலையில் பிச்சாட்டூர் அணையில் நீர் நிறுத்தப்பட்டதால் ஆரணி ஆற்றில் நீர் குறைந்து தற்காலிகமாக உடைப்பு ஏற்பட்ட கரையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகள் கொண்டு சவுக்கு கட்டைகளால் சீரமைத்தனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று முதல் 1600 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஆரணி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் ஆண்டார்மடம் பகுதியில் உள்ள கரையில் மணல் மூட்டைகளை தாண்டி தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இந்த மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தவிர அப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரி வேலைக்கு செல்பவர்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.