பொன்னேரி அருகே லாரி மோதி முதியவர் உயிரிழப்பால் சாலை மறியல் போராட்டம்
பொன்னேரி அருகே முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி அருகே சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது70). இவர் வல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து தனது சைக்கிளில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துறைமுகம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று சைக்கிள் மீது மோதி முதியவர் மீது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடித்துவிட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இதனை அடுத்து நேற்று மாலை உயிரிழந்த ஆசீர்வாதம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொன்னேரி- திருவொற்றியூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இச்சாலை வழியாக சென்னை, திருவொற்றியூர், எண்ணூர் துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், சிதிலமடைந்த இச்சாலையை சீர் செய்து எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், வேகத்தடைகள் அமைத்திட வேண்டும் என தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன ஆசீர்வாதம் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பொன்னேரி -திருவொற்றியூர் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.