பொன்னேரி பகுதி கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பொன்னேரி சுற்றுவட்டார கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் 10ஆண்டு அதிமுக ஆட்சியில் 3400கோடி சொத்துக்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் ஓராண்டு திமுக ஆட்சியில் 2666கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் அறநிலையத்துறைக்கு பொற்காலம். - பொன்னேரி சுற்றுவட்டார கோவில்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மேலூர் திருவுடையம்மன் கோவில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் நேரடி கள ஆய்வு நடத்தினார். மேலூர் திருவுடையம்மன் கோவில் முறையாக பராமரிக்காமல் நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் கோவில் பணியாளர்களையும், அறநிலையத்துறை அதிகாரிகளையும் அமைச்சர் சேகர்பாபு கடிந்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்து கோவில் அர்ச்சகர்கள், உள்ளூர் மக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் 3400 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே மீட்டகப்பட்டதாக தெரிவித்தார். வரலாற்றில் குப்தர் ஆட்சி, மௌரியர்கள் ஆட்சி என்பதை போல அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொற்காலம் என பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்தாண்டு 1000கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500கோவில்களின் புணரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன எனவும் 1000ஆண்டுகள் பழமையான 80கோவில்கள் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் திருக்கோவிலின் கும்பாபிஷேக நாள் இறுதி செய்யப்பட்டு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 8கோடி மதிப்பில் தங்கத்தேர் பணிகளும், 150கோடி மதிப்பில் கோவில் திருப்பணிகளும் நடைபெற உள்ளதாக கூறினார். தவறுகளுக்கு இடம் தராமல் சிறப்பாக பணிகள் நடைபெற்று வரும் கோவில்களின் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடாது என்றும் சட்டவிதிகளை மீறி கோவில்களை தவறாக பயன்படுத்தினால் மட்டுமே அறநிலையத்துறை தலையிடும் என்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் 5பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதற்கான கடிதத்தை ஏற்க மறுத்த நிலையில் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பட்டுள்ளது எனவும், வரவு - செலவு, கோவில் சொத்துக்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றார். அரசியல் செய்ய ஏதாவது தேவை என்பதால் சிலர் இறைவனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தேவையற்ற நபர்களுக்கு பதில் தருவதை தமிழக அரசு தவிர்த்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.