மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.;

Update: 2023-06-07 02:45 GMT

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.  

வடகாஞ்சி என அழைக்கப்படும் புகழ்பெற்ற மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அடுத்து பிரசித்திபெற்ற ஸ்தலமாக பார்ரக்கப்படும் வடகாஞ்சி என அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட. மீஞ்சூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3-ஆம் நாள் கருடோற்சவம் நடைபெற்ற நிலையில், நாள்தோறும் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் எனப்படும் திரு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திரு ஆபரணங்களாலும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிலையில் இருந்து புறப்பட்ட திருத்தேர், 4 மாட வீதிகளில் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அப்போது "கோவிந்தா", "கோவிந்தா" என பக்தர்களின் கோஷம் விண்ணை அதிரவைத்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

திருவிழாவை காண பொன்னேரி, பழவேற்காடு, செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News