பொன்னேரி அருகே அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி விழா
பொன்னேரி அருகே அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி விழாவையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.;
பொன்னேரி அடுத்த ஆனந்தி நகர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரியின் 12 வது ஆண்டு மயான கொள்ளைவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காய்கறிகளை படைத்து மாசாணி அம்மனை வழிபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆனந்தி நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரியின் 12 வது ஆண்டு மயான கொள்ளைவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காய்கறி படையலிட்டு கிடா வெட்டி, மாசாணி அம்மனை வழிபட்டனர். முன்னதாக மயான கொள்ளையையொட்டி ஆலயத்தில் பெரியாண்டவருக்கு கபால பூஜை ,அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மஹாதீப ஆராதனை நடைபெற்றது.
மயான கொள்ளையின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப் பட்ட அங்காள பரமேஸ்வரி திருத்தேரில் பவனிவர பக்தர்கள் புடைசூழ அங்காளபரமேஸ்வரி அம்மனின் திருஉருவ வேடம் அணிந்து ஆலய பூசாரி நகர் வலம் சென்று ஆரணி ஆற்றங்கரையில் 18 அடி நீளத்தில் பக்தர்கள் சார்பில் காய்கறிகளால் படைக்கப்பட்ட மாசாணி அம்மனிடம் வந்தடைந்ததும் பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் கிடா வெட்டி பூஜை செய்து மாசாணி அம்மனை வழிபட்டனர்.
மாசாணி அம்மனிடம் படைக்கப் பட்ட எலுமிச்சை, காய்கறிகளை பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிட போட்டி போட்டு பக்தியுடன் அள்ளி சென்றனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதே போல் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள கோவில்களிலும் மாசி மாத சிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.