மீஞ்சூர் அருகே டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
Lorry Two Wheeler Accident மீஞ்சூர் அருகே மெக்கானிக் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார்.;
Lorry Two Wheeler Accident
மீஞ்சூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் உயிர் இழப்பு. சாலை தடுப்புகள், மோசமான சாலையால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.வயது சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி நிலை தடுமாறிய போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சாலை தடுப்புகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். துறைமுகங்களுக்கு செல்லும் கன்டைனர் லாரிகள் தனி வழியில் செல்லும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடுப்புகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மீஞ்சூர் பிடிஓ அலுவலகம் முதல் வல்லூர் சந்திப்பு வரையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை கூட பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். சாலை பள்ளங்களை மூட சரளை கொட்டுவதால், சாலையில் இருந்து தூசி படர்ந்து முதலமைச்சரும் 3முறை இந்த சாலையில் பயணித்துள்ள நிலையில் இதுநாள் வரையில் சாலையை செப்பனிடாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர். விபத்துக்களை தவிர்த்திடும் வகையில் சாலை தடுப்புகளை அப்புறப்படுத்தி, மோசமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.