சிறுமியின் உயிரை காவு வாங்கிய குளிர்பான நிறுவனத்துக்கு சீல்
சிறுமியின் உயிரை காவு வாங்கிய ஆத்தூரில் உள்ள, குளிர்பான தொழிற்சாலைக்கு சீல் வைத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூடினர்.;
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சதீஷ், காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி (13) கடந்த 3ஆம் தேதி மாலை சிறுமி தரணி வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் டொக்கிட்டோ கோலா என்ற குளிர்பானத்தை வாங்கிக் குடித்த சில மணித்துளிகளில் வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதால் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பொழுது ஏற்கனவே சிறுமி தரணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அன்று மாலையே திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தின் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி தற்காலிகமாக ஆலையை மூட உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று ஆத்தூரில் செயல்பட்டுவரும் குளிர்பான தொழிற்சாலையில் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், சென்னை மாவட்ட அலுவலர் சதீஷ் குமார், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
கடைகளில் விற்பனை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட குளிர்பானங்களை அப்பொழுது ஆய்வு செய்தனர். இந்த தொழிற்சாலையில் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதற்காக அளிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் ஆலையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.