பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தருமபுரியை சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் கடந்த 24ஆம் தேதி கிருஷ்ணகிரி சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் சிவக்குமார் படுகொலையில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தாமதமின்றி ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.