பொன்னேரி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொன்னேரி அருகே பஞ்செட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
பொன்னேரி அருகே பஞ்செட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பொன்னேரி அருகே மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்து கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை, மகா பூரணாஹுதி உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலை பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தி கலசத்தில் பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தலையில் சுமந்து கொண்டு ஆலயம் சுற்றி வளம் வந்து பின்னர் ஆலய கோபுர கலசத்தின்மீது உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதன் பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடைகளை உடுத்தி வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.