பொன்னேரியில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு
பொன்னேரியில், ரூ. 1.5 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.;
பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழாவில், பங்கேற்ற பொதுமக்கள்.
பொன்னேரி 1.5கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. சிதிலமடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, காமராஜர் துறைமுகத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில், இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டன. காமராஜர் துறைமுகம் சார்பில், தினமும் 5லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் உள்ள பல்வேறு அரசு தொடக்கப்பள்ளிகள் சிதிலமடைந்த நிலையில் ஆபத்தான முறையில் இருந்தன. இதுகுறித்து அளிக்கப்பட புகாரில் பேரில், பள்ளிகளை ஆய்வு செய்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் காமராஜர் துறைமுகத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து பள்ளிகளை கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உத்தண்டிகண்டிகை, வேண்பாக்கம், சிறுவாக்கம், காட்டூர், கம்மவார்பாளையம், அக்கரம்பேடு, நாலூர் உள்ளிட்ட 8இடங்களில் தலா 18.9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த பள்ளி கட்டிடங்களின் திறப்பு விழா உத்தண்டிகண்டிகை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ரிப்பன் வெட்டி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற பள்ளிகளின் சாவியை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது;
காமராஜர் துறைமுகத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி மேம்பாட்டிற்க்காக பள்ளி கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. போக்குவரத்து மேம்பாட்டிற்காகவும் பல்வேறு இடங்களில் துறைமுகம் சார்பில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் துறைமுக நிதியில் இருந்து, விரைவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளொன்றுக்கு 5லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 75 சதவீத நிதி உள்ளூர் மேம்பாட்டிற்கும், 25 சதவீத நிதி வெளியூர் மேம்பாட்டிற்கு செலவிடலாம் என விதி உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் 100 சதவீத நிதி உள்ளூர் மக்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே நிதி பயன்படுத்தப்படும்.
இவ்வாறுசுனில் பாலிவால் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..