காதலி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மீஞ்சூர் அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கட்டிட வேலைக்காக தமிழ்நாடு வந்த 4நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். பலர் தனியார் தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிறார்கள்.
அந்த வகையில் பீகாரை சேர்ந்த ரோஹித்குமார் மாத்தோ (21) கடந்த 4நாட்களுக்கு முன் வடசென்னை அனல் மின் நிலையத்தில் கட்டிட வேலைக்கு வந்து சேர்ந்தார். பீகாரில் இருந்து வந்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் தமது உறவினர்கள் அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் பீகாரில் தனது காதலி ராணிக்குமாரி தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டு சோகத்தில் இருந்த ரோஹித்குமார் மாத்தோ கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி வேலைக்கு வந்த 4நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித்குமார் மாத்தோ காதலி இறந்த சோகத்தில் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கெலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.