பொன்னேரியில் திமுக நிர்வாகி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை
பொன்னேரியில், தமது அலுவலகத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி, மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
தற்கொலை செய்துகொண்ட திமுக இளைஞரணி நிர்வாகி திவாகர். (கோப்பு படம்)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் திவாகர்(32). வேண்பாக்கத்தில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தி வந்த நிலையில், அவரது அலுவலகத்தில் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும், உறவினர்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக, பொன்னேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தினர்.
இதனிடையே உயிரிழந்த திமுக இளைஞரணி நிர்வாகி திவாகரின் மனைவி ரஞ்சனி, தமது கணவருக்கு அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், அவரது குடும்பத்தினர் ரூ. 10 லட்சம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாகவும், தமது கணவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொன்னேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.