வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மின் உற்பத்தி பாதிப்பு

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை

Update: 2022-02-12 05:45 GMT

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வல்லூர் அனல்மின் நிலைய ஒப்பந்தத்தொழிலாளர்கள்

வல்லூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பணியாற்றும்  ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப்போராட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

மூன்றாவது அலகில் நிலக்கரி கையாளும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது.

சென்னை தொழிலாளர் நலவாரியத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என குற்றம் சாட்டி கடந்த 8ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Tags:    

Similar News