பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றின் பாதிப்பு :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்மையில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பூண்டி ஏரியில் இருந்து 38000கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் இருகரைகளை தொட்டு வெள்ளநீர் சீறிப்பாய்ந்தது.
பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளிவாயல், மணலி புதுநகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் உடமைகள் சேதமடைந்தன.
நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வெளியேறிய இடங்களில் கரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணலி புதுகர், வெள்ளிவாயல் பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் கரை உடைப்பு, கரை தாழ்வாக உள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் இனி மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் கரைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.