சிறுவாபுரியில் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட மனிதநேய வார விழா
பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் காவல் துறை சார்பில் மனிதநேய வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவாபுரியில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனிதநேய வார விழா நேற்று துவங்கி புதன்கிழமை வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில்,சோழவரம் ஒன்றியம்,சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் மனிதநேய வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் குழுவைச் சேர்ந்த துளசிராமன்,ஒன்றிய குழு உறுப்பினர் சந்துரு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தாசில்தார் சித்ரா கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,சிறுவாபுரி, சின்னம்பேடுபேட்டை,அகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் சார்பில் இந்த ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்,ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.சிறுவாபுரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய உரிய வழிவகை செய்து தர வேண்டும்.
மேலும், செவ்வாய்க்கிழமைகளில் கோவில் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தாரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,மனித உரிமைகள் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மேகநாதன்,பிரதாபன், ரங்கநாதன்,புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில்,ஊராட்சி செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.