அரசு பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்

பொன்னேரி அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு வந்த போதும் சாமர்த்தியமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய பின் மரணம்

Update: 2022-03-19 04:00 GMT

பேருந்தை ஓட்டியபோது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த அரசுபஸ்டிரைவர் கோலப்பன்

பொன்னேரி அருகே அரசு பேருந்து ஓட்டுநர் தனக்கு  மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய பின்னர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து தடம் எண் T28 என்ற அரசு பேருந்தை பொன்னேரி நோக்கி ஒட்டி சென்ற போது, மெதூர் பகுதிக்கு அருகே பேருந்து சென்ற நிலையில், பேருந்து ஓட்டுநர் கோலப்பன்(54) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெஞ்சு வலியையும் பொருட்படுத்தாமல், பயணிகளுடன் இருந்த பேருந்தை சாமர்த்தியமாக சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

நெஞ்சு வலி அதிகமானதால் அவர் பேருந்து இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். இது குறித்து பயணிகள் அளித்த தகவலின்பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் ஓட்டுநர் கோலப்பன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டும் 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய பின் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ஒருபுறம் சோகத்தையும், மறுபுறம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News