எல்&டி கப்பல் கட்டும்தளம் அதானி துறைமுகம் செல்லும் சாலையில் மீனவர்கள் போராட்டம்
வேலை வழங்க உறுதியளித்த 1,500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
பணி நிரந்தரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் செல்லும் சாலையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காட்டுப்பள்ளியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
பழவேற்காடு, லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்பலம், கோரைகுப்பம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் ஒட்டுமொத்தமாக இன்று மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு செல்ல தயாரான பழவேற்காடு மீனவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக திருவள்ளூர் மாவட்ட போலீசார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பழவேற்காட்டில் ஆங்காங்கே தடுப்பு வேலிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் மீனவர்கள் படகுகள் மூலம் பக்கிங்காம் கால்வாயில் போராட்டக் களத்திற்கு புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து சாலை மார்க்கமாகவே போராட்டக் களத்திற்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து காட்டுப்பள்ளியில் எல்என்டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் செல்லும் சாலையில் அமர்ந்து 500க்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவ கூட்டமைப்பை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்த எஞ்சிய ஆயிரத்து 500 பேருக்கும் வேலை வழங்க வேண்டும், அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பழவேற்காட்டில் இருந்து காமராஜர் துறைமுகம் செல்லும் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தங்களை கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவடி மாநகர காவல்துறை சார்பில் இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்ட களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.