எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

எண்ணூர் அருகே கொசஸ்த்தலை ஆற்றில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்ததால் சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-25 03:30 GMT

சடலத்துடன் எண்ணூர் சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த எண்ணூர் முகத்துவாரம் குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (30). மீனவரான இவர், வழக்கம்போல் நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக தனது படகில் சென்றவர், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், படகுகளில் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றில் அவரது படகு கவிழ்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஆற்றில் குதித்து மீனவர்கள் மாயமான விக்னேஷை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேற்றில் புதைந்தவாறு அவரது சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து திரண்டு வந்த அவரது உறவினர்கள், வடசென்னை அனல் நிலைய மூன்றாம் நிலையின் விரிவாக்க திட்டத்திற்காக கடலும், ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்திற்குச் செல்லும் மையப் பகுதியில் நீரோட்ட பாதையில் மண்ணை நிரப்பி சிமெண்ட் கலவையைக் கொண்டு உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மீனவரின் உயிரிழப்பிற்கு தமிழக மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டினர். 

இதனையடுத்து எண்ணூர் - அத்திப்பட்டு இடையே ஆற்றின் குறுக்கே செல்லும் மேம்பாலத்தில் உயிர் இழந்த மீனவர் விக்னேசின் சடலத்துடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News