பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் பேரணி
பொன்னேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் பேரணியாக சென்று மனு அளித்தனர்.
பொன்னேரியில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தினர். ஏக்கருக்கு 25000ரூபாய் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏற்கனவே புகையான் தாக்குதல், இலை சுருட்டு புழு என பாதிப்புகள் இருந்த சூழலில் தற்பொழுது புயல், மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காலங்களில் விவசாயிகள் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் முறையான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என கூறி இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றனர். பேரணி செல்ல கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் சண்முகத்திடம் வழங்கினர்.
ஏக்கருக்கு அரசு 6800 ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது போதாது எனவும், ஏக்கர் ஒன்றிற்கு 25000 ரூபாய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பயிர் காப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும் என்றும், 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ரேண்டம் முறையில் என்பதை கைவிட்டு பாதிக்கப்படும் பயிர்களுக்கு முறையாக பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும், வேளாண்மைதுறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.