போலி பட்டா மூலம் ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு தரக்கோரி விவசாயி போராட்டம்
பொன்னேரியில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்
பொன்னேரி அருகே போலி பட்டாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலத்தை மீட்டு தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயி முற்றுகையிட்டு ஆவணங்களை வீசி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியகாவணம் கிராமத்தை விவசாயி காசி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, தனிநபர் ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை எனவும், மீண்டும் அளவீடுகள் செய்து நிலத்தினை மீட்டு தரவேண்டும் எனவும், வருவாய்த்துறையினரிடம் பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி காசி, தமது உறவினர்களுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வீசி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவை முற்றுகையிட்டு உடனே நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என முறையிட்டனர். இது தொடர்பாக, டிச.1 -ஆம் தேதி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக சார்-ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்தார். உடனடியாக தீர்வு ஏற்படுத்தி வேண்டும் எனக்கூறியதால் விரைவில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
போலி ஆவணம், மோசடி போன்றவற்றின் மூலம் செய்யப்படும் ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் நில மோசடி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் போன்றவற்றின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்து வருவது அதிகரித்து வருவதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன.