பொன்னேரி அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
பொன்னேரி அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நேற்று சுற்றுவட்டார இடங்களில் பிற்பகல் சுமார் 30.நிமிடத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
பிற்பகல் பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற விவசாயி தமது உறவினர்களுடன் பச்சைப்பயிறு மூட்டைகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக தார்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மின்னல் தாக்கியதில் விவசாயி சரவணன், உறவினர் வேம்புலி ஆகிய இருவர் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விவசாயி சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வேம்புலி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பணிகளை மேற்கொண்ட விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.