விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் சிக்கிய வெடிபொருள்..!
பெரியபாளையத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் சிக்கிய வெடிபொருள்களால் பரபரப்பு;
பெரியபாளையம் பி. டி. ஓ அலுவலகம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி எதிரில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் பந்தை அடிப்பதற்கு முன்பு கிரிக்கெட் மட்டையை தரையில் தட்டியுள்ளான். அப்போது தரையில் ஏதோ இரும்பு பொருளில் கிரிக்கெட் மட்டை தட்டு பட்டுள்ளது. இதை அறிந்து அந்த சிறுவன் என்ன என்று கையால் தோண்டி பார்த்துள்ளான். அப்போது அந்த இரும்பு பொருள் ராக்கெட் போல் இருந்துள்ளது. இதை அறிந்த சக சிறுவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். உடனே அவர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி சாரதி, பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் ஹரிணீஸ்வரி மற்றும் எஸ்.ஐ. நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது ராக்கெட் போல் உருவம் கொண்ட அந்த இரும்பு பொருள் ராணுவத்தில் ராக்கெட் லான்ச்சில் பயன்படுத்தக்கூடிய வெடிபொருள் என தெரியவந்தது. பின்னர் அந்த வெடிபொருளை போலீசார் கைப்பற்றி அதை செயலிழக்க செய்ய கும்மிடிப்பூண்டி பகுதிக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் பெரியபாளையத்தில் 2மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.