சிறுவாபுரி முருகன் கோவில் தைப்பூச விழாவில் முதியோர், குழந்தைகள் அவதி
சிறுவாபுரி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் முதியோர், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.;
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதையும், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிப்பதையும் காணலாம்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததால் முதியோர்கள், குழந்தைகள் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு. 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.
இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோத தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்ட மக்களும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தியும், காவடி சுமந்து வந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் நெய்தீபம் ஏற்றியும், செங்கற்களை அடுக்கி வைத்தும் வழிபாடு செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ச்சியாக கூட்டம் அலைமோதியதால் சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் சிலர் தெரிவிக்கையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு சாமி கும்பிட வந்ததாகவும் கோவிலில் சிறப்பு வி.ஐ.பி. தரிசனங்கள் விழா காலங்களில் ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் குழந்தைகள் முதியோர்கள் திறந்தவெளியில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் வந்து செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆரணியில் இருந்து சிறுவாபுரி வழியாக செங்குன்றம் சென்னைக்கு செல்ல வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதாகவும் எனவே இதனை அரசு கருத்தில் கொண்டு விழா காலங்களில் வி.ஐ.பி. உள்ளிட்ட தரிசனங்களை ரத்து செய்யவேண்டும் எனவும் கூறினார்கள்.
மேலும் இந்த கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை சமீபத்தில் அகற்றிய இடங்களில் மீண்டும் சாலை ஓரங்களில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதாகவும் இதனால் பக்தர்கள் வந்து செல்ல மிகவும் கடினமாக உள்ளது என்றும் எனவே அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.