ஆரணி அருகே பாம்பு கடித்ததில் அண்ணனை தொடர்ந்து தம்பியும் உயிரிழப்பு
ஆரணி அருகே பாம்பு கடித்ததில் அண்ணனை தொடர்ந்து தம்பியும் பரிதாபதமாக உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பாபு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி விஜயலட்சுமி மற்றும் ரமேஷ் (14), தேவராஜ் (13) என்ற இரு மகன்கள் இருந்தனர். ஆரணியில் உள்ள அரசுப் பள்ளியில் ரமேஷ் 9 ம்வகுப்பும் தேவராஜ் 8ம் வகுப்பும், படித்து வந்தனர். கடந்த 4.ஆம் தேதி இரவு குடும்பத்துடன் சிறுவர்கள் இருவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவர்களின் தந்தை பாபு மீது ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றது போல் தெரியவந்தது.
உடனடியாக எழுந்து பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக இரண்டு மகன்களை அருகில் இருந்த மற்றொரு வீட்டில் கொண்டு சென்று தூங்க படுக்க வைத்தார். பின்னர் வந்து பார்த்தபோது அது விஷம் நிறைந்த கட்டுவிரியன் பாம்பு என்று தெரிந்து உடனடியாக அதனை அடித்து கொன்றார்.
பின்பு சிறிது நேரத்தில் இரண்டு சிறுவர்களும் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கினார். தனது மகன்களை பாம்பு கடித்திருக்கிறது என்று உணர்ந்த பாபு அக்கம் பக்கத்தினர் உதவியோடு. இரண்டு சிறுவர்களையும் மீட்டு வெங்கல் தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றார். முதல் உதவி சிகிச்சை செய்து பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்இதில் ரமேஷ் 5. ம்தேதி காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த நிலையில் அவனது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து தம்பி தேவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தான். 3நாட்கள் தொடர் சிகிச்சையில் உடல்நிலை மோசமான நிலையில் எந்த முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக உயிர்ழந்தான்.
பாம்பு கடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி என இரண்டு சிறுவர்கள் உயிர்ழந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் பாம்பு கடிக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டும் பணியாற்றி வருவதாகவும் மருத்துவர்கள் சரிவரை இருப்பதில்லை என்றும் அனைத்து மருத்துவமனைகளும் 24 மணி நேரம் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.