பழவேற்காடு ஏரியில், மீன் பிடிப்பதில் தகராறு; கலெக்டர் திடீர் உத்தரவு
பழவேற்காடு ஏரியில், கடலில் பயன்படுத்தும் வலைகளை பயன்படுத்தவும், குறைந்த கண்ணி அளவு வலைகளை பயன்படுத்தவும் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.;
மீன் பிடிக்கும் மீனவர்கள் ( கோப்பு படம்)
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் மற்றும் 12கிராம மீனவர்களிடையே பிரச்சனை இருந்து வந்தது.
கடலில் மீன்பிடி தொழில் செய்யும் கூனங்குப்பம் மீனவர்கள், பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடிக்கின்றனர். இதற்கு அந்த ஏரியில் மீன்பிடிக்கும் கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதா குப்பம் உள்ளிட்ட 12கிராம மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கூனங்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் இருதரப்பு மீனவர்களிடையே கலெக்டர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இருதரப்பு மீனவர்கள் கருத்துகள், மீன்வளத்துறை அறிக்கையின் பேரில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கூனங்குப்பம் மீனவர்கள் 1950ம் ஆண்டு, அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பழவேற்காடு ஏரியின் ஓரக்கரையில், செல்லக்கரைப்பாடு பகுதியில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும், கடலில் பயன்படுத்தும் அரை வலை, நண்டு வலை, டிரம்மர் வலை ஆகியவற்றை கொண்டு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது, பழவேற்காடு ஏரியில் 25மிமீ கண்ணி அளவிற்கு குறைவாக உள்ள வலைகளை பயன்படுத்தவும் தடை விதித்து, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினை வருவாய்த்துறை, மீன்வளத்துறை, போலீஸ் அதிகாரிகள் நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.